Sunday, January 2, 2011

எனதாக நீயானாய்


ஏழு வானங்களும் நிரம்பி வழியும்படியான
நேசத்தைப் பூத்திருக்கின்றன உனது விழிகள்
சுகந்தம் வீசிப் பரவுமதன் பூரிப்பில்தான்
செழிக்கிறேன் நானும்

காலங்காலமாக மென்மையில்
ஊறிக்கிடக்கும் மனமதில்
எக் கணத்தில் குடியேறினேனோ
இசைத்த கீதங்களின் ஒலியிலெனது
இடர்கள் தீர்ந்தன
உற்சாகத்தின் வீரியமிக்க விதைகள்
உன் நம்பிக்கையின் கரங்களால்
ஊன்றப்பட்ட நாளதில்தான்
தூய சுவனத்தின் மழையென்னை
முழுதும் நனைக்கப் பெய்ததையுணர்ந்தேன்

கலக்கின்றதுயிரில்
செவிகளுக்குள் நுழைந்த
உனதெழில் பாடல்களினூடு
ஆளுமைமிகு தொனி

இரைத்திரைத்து ஊற்றியும்
வரண்டிடா அன்பையெல்லாம்
எங்கு வைத்திருக்கிறாய் உயிர் சகா
காணும்போதெல்லாம் எழுமுன் புன்னகையின்
கீற்றில்தான் உதிக்கிறது எனதுலகு

மஞ்சள் பறவையொன்றும் சில அணில்குஞ்சுகளும்
வாடி உதிர்ந்திடா மலர்கள் நிறைந்த
சோலையில் விளையாடும்
வசந்தகாலத்தின் காலையொன்றில்
நானினி வாழ்வேன்
ஒலிக்கும் இன்னிசையின் பிண்ணனியில்
நீயிருப்பாய் என்றென்றுமினி

 - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# வல்லினம் இலக்கிய இதழ் - ஜனவரி, 2011
# காற்றுவெளி இலக்கிய இதழ் - ஜனவரி, 2011
# வார்ப்பு
# திண்ணை

7 comments:

ராமலக்ஷ்மி said...

நட்பைப் போற்றும் நல்ல கவிதை.

புது வருடத்தில் எல்லா வளங்களையும் தர, சிகரங்களைத் தொட இனிய நல்வாழ்த்துக்கள்.

விஜி said...

*பரவசமூட்டும் கவிதை!*
*பூரிப்பூட்டும் வார்த்தைகள்!*
*தேன் சுமந்த தென்றலாய்!*
*மிக நன்று ரிஷான்.*

பூங்குழலி said...

மஞ்சள் பறவையொன்றும் சில அணில்குஞ்சுகளும்வாடி உதிர்ந்திடா மலர்கள் நிறைந்தசோலையில் விளையாடும்வசந்தகாலத்தின் காலையொன்றில்நானினி வாழ்வேன்

புது வருடத்தின் துவக்கத்திற்கு அருமையான கவிதை ரிஷான் .இது இன்றும் இனி வரும் ஆண்டுகள் முழுமையும் நிறைந்திருக்க வாழ்த்துகள்

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//நட்பைப் போற்றும் நல்ல கவிதை.

புது வருடத்தில் எல்லா வளங்களையும் தர, சிகரங்களைத் தொட இனிய நல்வாழ்த்துக்கள்.//

வருகைக்கும், அருமையான புதுவருட நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி.
உங்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் :-)

M.Rishan Shareef said...

அன்பின் விஜி,

//*பரவசமூட்டும் கவிதை!*
*பூரிப்பூட்டும் வார்த்தைகள்!*
*தேன் சுமந்த தென்றலாய்!*
*மிக நன்று ரிஷான்.*//

கருத்துக்கு நன்றி தோழி :-)

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//மஞ்சள் பறவையொன்றும் சில அணில்குஞ்சுகளும்வாடி உதிர்ந்திடா மலர்கள் நிறைந்தசோலையில் விளையாடும்வசந்தகாலத்தின் காலையொன்றில்நானினி வாழ்வேன்

புது வருடத்தின் துவக்கத்திற்கு அருமையான கவிதை ரிஷான் .இது இன்றும் இனி வரும் ஆண்டுகள் முழுமையும் நிறைந்திருக்க வாழ்த்துகள்//

மனமார்ந்த உங்கள் வாழ்த்துக்கள் பலிக்கட்டும். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி.
உங்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் :-)

Anonymous said...

ஏழு வானங்களும் நிரம்பி வழியும்படியான
நேசத்தைப் பூத்திருக்கின்றன உனது விழிகள்.
சுயநலம் மட்டுமே நிரம்பிவழிகிற உலகில் இப்படியான நட்புக் கிடைப்பதே மிக அபூர்வம்.அந்த வகையில் அதிஸ்டசாலிதான். உங்களின் அனேகமான கவிதைகள் போலவே இதுவும் அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.
சகோதரி
எஸ். பாயிஸா அலி