Wednesday, April 10, 2013

காலத்தின் கொலைகாரன்


வினைகளின் சருகுகளைத் தீண்டிடவென
புதிதாக விழுந்திருக்கிறது
ஐங்கூர் பழுத்த இலை
சிவப்புக் கலந்த நிறமதற்கு
உடைசல்களின் சிதிலங்களுக்கிடையில்
சிக்கியிருக்கிறது புதுத் தளிரொன்றும்

எப்படிப் பூத்ததுவோ
பசுமையெரிந்த செடிகளுக்கிடையில்
எதற்கும் வாடிடா மலரொன்று
அன்றியும்
எந்தக் கனிக்குள் இருக்கின்றது
அடுத்த மரத்துக்கான விதை

எல்லா வாசனைகளும் பூக்களாகி
நாசிக்குள் நுழையும் கணமொன்றில்
செழித்த ஏரியின்
கரைகளைக் காக்கின்றன ஓர மரங்கள்

வசந்தத்தின் முகில் கூட்டங்களலையும்
சுவரோவியங்களில் தோப்புக்கள்
எவ்வளவு ரம்யமானதாயிருக்கின்றன

இங்கு நீர் தேங்கிய குட்டைகளில்
தலைகீழாக வளருகின்றன
அருகாமை சடப்பொருட்கள்

விம்பங்கள் மட்டுமே காட்டுகின்றன
வாழ்வின் நிறங்களை
கனவுக் கண்ணாடிகளில்

தேய்ந்திடும் காலமொன்றை நோக்கியே
நகரும் எண்ணங்களுக்குக் கூடமைத்து
வர்ணங்களைத் தீட்டலாமினி

ஆமாம்
காத்திருப்பு
காலத்தின் கொலைகாரன்தான்

- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# அம்ருதா, மகுடம் - கலை,இலக்கிய இதழ் 03, நவீன விருட்சம், பதிவுகள், திண்ணை

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் வரிகள்...

முடிவில் உண்மை...

பூங்குழலி said...


இங்கு நீர் தேங்கிய குட்டைகளில்
தலைகீழாக வளருகின்றன
அருகாமை சடப்பொருட்கள்

அருமையான கவிதை ரிஷான் -நலம்தானே ?

M.Rishan Shareef said...

அன்பின் தனபாலன்,

//ரசிக்க வைக்கும் வரிகள்...

முடிவில் உண்மை...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

நலம் சகோதரி.
நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்புச் சகோதரி !