Sunday, November 15, 2009

மெல்லிசையழிந்த காலம்


உனக்கும் எனக்குமென்றிருந்த
ஒரேயொரு வீட்டின் அறைகளில்
அன்பைப் பூசி அழகுபடுத்தினோம்
பளிங்கென மிளிர்ந்த குவளைகளில்
பாசம் தேக்கி மெல்லப் பருகினோம்
மெல்லிசையைப் பாடல்களைத்
திக்கெட்டும் அனுப்பி
கூடிப் பேசிக் களித்திருந்தோம்
இருவரும் உறங்கிடும் மௌனத்துக்குள்
புது மொழியொன்றினைக் கற்றறிந்தோம்
சிரித்தோம் ஆனந்தித்தோம்
வாழ்ந்தோம்

கருணையின் கற்கள் தேடிக்
கட்டிய வீட்டுக்குள்
குரூப இதயங்கொண்டவர்கள் நுழைய
ஏன் அவ்வேளை அனுமதித்தோம்
பளிங்குக் குவளைகளில்
நிறைந்திருந்த பாசம் கொட்டி
சாக் கொணரும் விஷத்தினை
அவை வந்து நிரப்பிட ஏன் இடங்கொடுத்தோம்
இருவருக்கிடையிலும் பெருந்திரை பொருத்தி
உன் பற்றி என்னிலும்
என் பற்றி உன்னிலுமாக
நம் செவி வழி ஊதப்பட்ட வசவுகளை நெருக்கி
ஏன் அருகிலமர்த்திக் கொண்டோம்
பழகிய நேச மொழிகளை மறந்த மனங்களிரண்டும்
ஆழுறக்கம் தழுவட்டுமென
ஏன் அப்படியே விட்டுவைத்தோம்
அழுதோம் துயருற்றோம் - இன்றோ
இறவாது தினம் இறக்கிறோம்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி

# உயிர் எழுத்து இலக்கிய இதழ் - அக்டோபர், 2009
# உயிர்மை
# திண்ணை


33 comments:

கானா பிரபா said...

கவிதையை ரசித்தேன்

Admin said...

நல்ல கவிதை.... அத்தனை வரிகளுக்கு அருமை.

தமிழன் வேணு said...

சுதிபேதம் ஏற்பட்டால் மெல்லிசையும் கொல்லிசை ஆகி விடுமோ? அருமையான கவிதை ரிஷான்!

பூங்குழலி said...

அந்த படத்தை பார்த்தவுடனே தெரிந்து விட்டது உள்ளே என்ன இருக்கும் என்று ...
முதல் பத்தியில் காதலை அழகாய் சொன்னீர்கள் வாழ்க்கையை இணைந்து சுவைப்பதையும் ....
இரண்டாம் பத்தியில் அதையே மாற்றி சொல்லியிருப்பது அழகு .இறவாமல் இறக்கிறோம் ..அருமை

தேனுஷா said...

//கருணையின் கற்கள் தேடிக்
கட்டிய வீட்டுக்குள்
குரூப இதயங்கொண்டவர்கள் நுழைய
ஏன் அவ்வேளை அனுமதித்தோம்//


இதுதான் பிழை
அன்புக்குள் அடுத்தவர் நுழைதல் ஆகாது

விஷ்ணு said...

அருமை நண்பரே ..

ஃபஹீமாஜஹான் said...

"கருணையின் கற்கள் தேடிக்
கட்டிய வீட்டுக்குள்
குரூப இதயங்கொண்டவர்கள் நுழைய
ஏன் அவ்வேளை அனுமதித்தோம்
பளிங்குக் குவளைகளில்
நிறைந்திருந்த பாசம் கொட்டி
சாக் கொணரும் விஷத்தினை
அவை வந்து நிரப்பிட ஏன் இடங்கொடுத்தோம்"

எத்தனையோ பேரினது வாழ்க்கைகள் சிதறிப் போனதற்கும் இதுதான் காரணம்.
நமக்கான வாழ்க்கைக்குள் அடுத்தவரைப் புகுந்து விளையாட விட்டுவிட்டால் கடைசியில்

"அழுதோம் துயருற்றோம் - இன்றோ
இறவாது தினம் இறக்கிறோம்"
இதுதான் யதார்த்தமாகிப் போய்விடுகிறது :(

சிவசுப்ரமணியன் said...

அருமையான கவிதை ரிஷான்

M.Rishan Shareef said...

அன்பின் கானா பிரபா,

//கவிதையை ரசித்தேன்//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் சந்ரு,

//நல்ல கவிதை.... அத்தனை வரிகளுக்கு அருமை.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் வேணு,

//சுதிபேதம் ஏற்பட்டால் மெல்லிசையும் கொல்லிசை ஆகி விடுமோ? அருமையான கவிதை ரிஷான்! //


:)
கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//அந்த படத்தை பார்த்தவுடனே தெரிந்து விட்டது உள்ளே என்ன இருக்கும் என்று ...
முதல் பத்தியில் காதலை அழகாய் சொன்னீர்கள் வாழ்க்கையை இணைந்து சுவைப்பதையும் ....
இரண்டாம் பத்தியில் அதையே மாற்றி சொல்லியிருப்பது அழகு .இறவாமல் இறக்கிறோம் ..அருமை //


:)

கருத்துக்கு நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் தேனுஷா,


//உனக்கும் எனக்குமென்றிருந்த
ஒரேயொரு வீட்டின் அறைகளில்
அன்பைப் பூசி அழகுபடுத்தினோம்
பளிங்கென மிளிர்ந்த குவளைகளில்
பாசம் தேக்கி மெல்லப் பருகினோம்
மெல்லிசையைப் பாடல்களைத்
திக்கெட்டும் அனுப்பி
கூடிப் பேசிக் களித்திருந்தோம்
இருவரும் உறங்கிடும் மௌனத்துக்குள்
புது மொழியொன்றினைக் கற்றறிந்தோம்
சிரித்தோம் ஆனந்தித்தோம்
வாழ்ந்தோம்

கருணையின் கற்கள் தேடிக்
கட்டிய வீட்டுக்குள்
குரூப இதயங்கொண்டவர்கள் நுழைய
ஏன் அவ்வேளை அனுமதித்தோம்


இதுதான் பிழை
அன்புக்குள் அடுத்தவர் நுழைதல் ஆகாது //


மிகச் சரி தோழி..ஆனால் நாம் நுழைய விட்டுவிடுகிறோம்.
எல்லாம் முடிந்தபின்பு வருந்துகிறோம்.

கருத்துக்கு நன்றி தோழி !

M.Rishan Shareef said...

அன்பின் விஷ்ணு,

//அருமை நண்பரே .. //


கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் சிவா,

//அருமையான கவிதை ரிஷான் //


கருத்துக்கு நன்றி அன்பு நண்பா !

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமா ஜஹான்,

//"கருணையின் கற்கள் தேடிக்
கட்டிய வீட்டுக்குள்
குரூப இதயங்கொண்டவர்கள் நுழைய
ஏன் அவ்வேளை அனுமதித்தோம்
பளிங்குக் குவளைகளில்
நிறைந்திருந்த பாசம் கொட்டி
சாக் கொணரும் விஷத்தினை
அவை வந்து நிரப்பிட ஏன் இடங்கொடுத்தோம்"

எத்தனையோ பேரினது வாழ்க்கைகள் சிதறிப் போனதற்கும் இதுதான் காரணம்.
நமக்கான வாழ்க்கைக்குள் அடுத்தவரைப் புகுந்து விளையாட விட்டுவிட்டால் கடைசியில்

"அழுதோம் துயருற்றோம் - இன்றோ
இறவாது தினம் இறக்கிறோம்"
இதுதான் யதார்த்தமாகிப் போய்விடுகிறது :(//

மிகச் சரி.
ஆனால் அவ்வாறானவர்கள் உள்நுழைகையில் தடுத்துவிட முடியாதவர்களாகவும் ஆகிவிடுகிறோம் இல்லையா? :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

ஜெயஸ்ரீ ஷங்கர் said...

அன்பு ரிஷான்....
ஆழமான அர்த்தம்.....நல்ல ஸ்ருதி கண்ட இல்லறம்.....தாளம் மாறி......பாடப்படும் வேதனை.........
மிகவும் மெல்லிய ராகமாய்.....ஆனந்த பைரவியில் இருந்து.....முகாரிக்கு இட்டு சென்றீர்......
இதமாய் இருந்தது......ஈரமாகவும் இருந்தது.....
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்..

சிவா.ஜி said...

நல்ல புரிந்துணர்வுடன் வாழப்பட்ட இன்ப வாழ்க்கை, அந்த அன்புக்கிண்ணங்களில் விஷம் ஊற்றப்பட்டவுடன் திசைமாறிப்போய்விட்டதை ஆற்றாமையுடன் அரற்றும் வரிகள்.

புரிதலில்லாததால் ஏற்படும் சிறிய இடைவெளிகள் எத்தனை துன்பத்தைக் கொண்டுவந்துவிடுகின்றன...

வாழ்த்துகள்+ பாராட்டுக்கள் ரிஷான்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ said...

வெகு தினங்களுக்குப் பின் படிக்கும் கவிதை இது. அழகான வரிகள். தாலாட்டும் சொற்றொடர்கள். மிக அருமை நண்பரே.

இளசு said...

இணைந்து இயைந்து வாழும் இரு இதயங்களுக்கு மட்டுமன்று.
இரு இனங்களுக்கும் இக்கவிதை பொருந்தும்...

இல்லங்கள் மட்டுமன்றி
தேசங்கள் சிதறுவதும்
இசை(வது) அழிவதாலேயே!


கவிதைக்குப் பாராட்டுகள் ரிஷான்..

ஜனகன் said...

நல்ல கவிதை, கருத்தும்தான். தற்போதைய சூழ்நிலையில் இது இலங்கைக்கும் பொருந்தும். நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு.

செல்வா said...

இரு மனங்கள் மட்டுமல்லாது இனங்கள் என்று
இனங்கண்ட ஆனந்தத்தில் கீழே வந்தால்
இளசு அண்ணாவின் உரைகள் அதே தொனியில்

அண்ணனேச் சொல்லியபின் தம்பி நான் சொல்வதென்ன...

வாழ்த்துக்கள் ரிஷான்.

M.Rishan Shareef said...

அன்பின் ஜெயஸ்ரீ ஷங்கர்,

//அன்பு ரிஷான்....
ஆழமான அர்த்தம்.....நல்ல ஸ்ருதி கண்ட இல்லறம்.....தாளம் மாறி......பாடப்படும் வேதனை.........
மிகவும் மெல்லிய ராகமாய்.....ஆனந்த பைரவியில் இருந்து.....முகாரிக்கு இட்டு சென்றீர்......
இதமாய் இருந்தது......ஈரமாகவும் இருந்தது.....//


தெளிவான புரிதலுடன் அழகான கருத்து.
நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் சிவா.ஜி,

//நல்ல புரிந்துணர்வுடன் வாழப்பட்ட இன்ப வாழ்க்கை, அந்த அன்புக்கிண்ணங்களில் விஷம் ஊற்றப்பட்டவுடன் திசைமாறிப்போய்விட்டதை ஆற்றாமையுடன் அரற்றும் வரிகள்.

புரிதலில்லாததால் ஏற்படும் சிறிய இடைவெளிகள் எத்தனை துன்பத்தைக் கொண்டுவந்துவிடுகின்றன...//

நிச்சயமாக நண்பரே.
எல்லா இடங்களிலும் அதிகமான பிரிவுகளுக்குக் காரணம் தவறான புரிதல்கள்தான்.

//வாழ்த்துகள்+ பாராட்டுக்கள் ரிஷான். //

அன்பான பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் சுனைத் ஹசனீ,

//வெகு தினங்களுக்குப் பின் படிக்கும் கவிதை இது. அழகான வரிகள். தாலாட்டும் சொற்றொடர்கள். மிக அருமை நண்பரே. //

நீண்ட நாட்களின் பின்னர் உங்களைக் காண்கிறேன். நலமா?
கவிதை குறித்தான கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் இளசு,

//இணைந்து இயைந்து வாழும் இரு இதயங்களுக்கு மட்டுமன்று.
இரு இனங்களுக்கும் இக்கவிதை பொருந்தும்...

இல்லங்கள் மட்டுமன்றி
தேசங்கள் சிதறுவதும்
இசை(வது) அழிவதாலேயே!//

நிச்சயமாக நண்பரே !
உங்களது ' இசை(வது) அழிவதாலேயே' இச் சொல்லாடலை வெகுவாக ரசித்தேன்.

//கவிதைக்குப் பாராட்டுகள் ரிஷான்..//

கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஜனகன்,

//நல்ல கவிதை, கருத்தும்தான். தற்போதைய சூழ்நிலையில் இது இலங்கைக்கும் பொருந்தும். நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு. //

:)
கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் செல்வா,

//இரு மனங்கள் மட்டுமல்லாது இனங்கள் என்று
இனங்கண்ட ஆனந்தத்தில் கீழே வந்தால்
இளசு அண்ணாவின் உரைகள் அதே தொனியில்

அண்ணனேச் சொல்லியபின் தம்பி நான் சொல்வதென்ன...

வாழ்த்துக்கள் ரிஷான். //

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

அமரன் said...

அன்பு மணலில் அணைகட்டி
குச்சி ஒன்றை ஒளித்து வைத்து
கீச்சு மாச்சுத் தம்பளம்
விளையாடிய கணங்களையும்
விளையாட்டின் முடிவுகளையும்
கிளறிவிட்டு வேடிக்கை பார்க்கும் கவிதை...

புதைத்து வைச்ச கைகளில் சிக்கிய குச்சி
சிலருக்குச் சிராய்... சிலருக்குப் புதையல்..

இடையில் புகுந்தவர்கள்
இடை வெளி மிகுந்த வரிகள்.
விருப்பப்படி நிரப்பலாம.

நிறைகளை மட்டும் நினைவில் கொள்.

அந்தவகையில் இந்தக் கவிதை பலபடி மேல்.

பாராட்டுகள் ரிஷான்.

M.Rishan Shareef said...

அன்பின் அமரன்,

அழகான மொழி நடையில் மிகவும் ஆழமான கருத்தினைப் பகர்ந்திருக்கிறீர்கள்.
கருத்திற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி அன்பு நண்பரே !

பாரதி said...

மிக அழகான வாழ்வியல் கவிதை. மிக நன்று நண்பரே.
பலரும் பகிர்ந்த நல்ல பின்னூட்டங்களுடன் நானும் ஒத்துப்போகின்றேன்.
எப்பொருள் யார்யார்- வள்ளுவர் மொழி நினைவுக்கு வருகிறது.
அழிந்த காலத்தை நினைத்தே நழிவுற வேண்டுமோ...?

M.Rishan Shareef said...

அன்பின் பாரதி,

//மிக அழகான வாழ்வியல் கவிதை. மிக நன்று நண்பரே.
பலரும் பகிர்ந்த நல்ல பின்னூட்டங்களுடன் நானும் ஒத்துப்போகின்றேன்.
எப்பொருள் யார்யார்- வள்ளுவர் மொழி நினைவுக்கு வருகிறது.
அழிந்த காலத்தை நினைத்தே நழிவுற வேண்டுமோ...? //

இல்லை. ஆனால் அனுபவித்தவர் எழுதி வைத்தால், அந்த அனுபவம் பிறர்க்குப் பாடமாக அமையும்தானே? :)

கருத்துக்கு நன்றி நண்பரே !

cheena (சீனா) said...

அன்பின் ரிஷான்

கவிதை அருமை - அருமை
சிந்தனை அருமை - காதல் அழகனதாகவும் அருவருப்பானதாகவும் சித்தரிக்கப்பட்டு இருக்கும் விதம் அருமை. ஆமி புகுந்த வீடு போல அடுத்தவர் புகுந்த வாழ்க்கை சுவைக்காது.

நல்வாழ்த்துகள் ரிஷான்
நட்புடன் சீனா